மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் கொடுத்ததாக வெளியான செய்தி ஆதாரமற்றவை என நெல்சன் மனைவி மோனிஷா தரப்பில் இன்று (ஆக. 21) விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தன்னைப் பற்றி அவதூறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், தவறான தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, மலர்கொடி, அஞ்சலை, ஹரிதரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரெளடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்குரைஞர் மொட்டை கிருஷ்ணன், இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவரை பிடிக்க நேற்று (ஆக. 20) லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதாக திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மோனிஷாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் வழக்குரைஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பதாக தகவல் பரவியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை என மோனிஷா தரப்பிலிருந்து அவரின் வழக்குரைஞர் இன்று (ஆக. 21) விளக்கம் அளித்தார்.
மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் கொடுத்ததாக வெளியான செய்தி ஆதாரமற்றவை, தவறானவை எனத் தெரிவித்தார்.
காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், மோனிஷாவின் நற்பெயருக்கு கலங்கள் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மோனிஷா தொடர்பான தவறான தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.