“ஆம்ஸ்ட்ராங் மறைவு…. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு” – துரை வைகோ | Armstrong murder tragedy for downtrodden Durai Vaiko

1275436.jpg
Spread the love

மதுரை: ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு என திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்தார். பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தான் செய்கிறது. காவல் துறையும் தமிழக அரசும் இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவம் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மதுரையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி எம்.பி துரை வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரையின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் கொலை இந்த கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல் துறை மற்றும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து சொல்லியுள்ளார்கள். இந்த கொலை அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா, இல்லை தனிப்பட்ட காரணத்துக்காக நடைபெற்றதா என விசாரணைக்கு பின்பு தான் தெரியும்.

தமிழகம் கலவர பூமியாக மாறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். பாஜகவின் சில தலைவர்கள் சில கருத்துக்களை சொல்லி உள்ளார்கள். பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தான் செய்கிறது. ஆனால் அரசியல் பார்க்காமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு. எதிர்காலத்தில் இது போன்று அரசியல் தலைவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடைபெறாமல் காவல் துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

வளரும் நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற தான் செய்கிறது. ஆனால், காவல் துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

பூரண மதுவிலக்கு உள்ள குஜராத், உத்தர் பிரதேசத்திலும் கள்ளச் சாராய மரணங்கள் நடைபெறத் தான் செய்தது. இது குறித்து மக்களுக்குத்தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும். எங்கள் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அப்போதைய அரசு பொது மதுக்கடை திறப்பதாக அறிவித்ததற்கு எங்க தலைவர் தலைமையில் ஒட்டுமொத்த பொதுமக்களும் சேர்ந்து மதுக்கடை கூடாது என்று போராடி சட்டப் போராட்டத்தை நடத்தினோம்.

மக்கள் ஒன்று கூடி மதுக்கடை வேண்டாம் என்று சொன்னால் அரசாங்கமே நினைத்தாலும் திறக்க முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுவை யாரும் கட்டாயப்படுத்தி குடிக்க சொல்வதில்லை. மதுக்கடைகளை மக்கள் புறக்கணிக்கும்போது அதற்கு உண்டான முடிவு இயற்கையாகவே வந்துவிடும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்திருக்கக் கூடாது. அவர்கள் புறக்கணிப்பது மதவாத சக்திகளான பாஜக தமிழகத்தில் வேரூன்ற வாய்ப்பாக உள்ளது. திமுகவுக்கு மாற்று அதிமுக என்று தான் நான் சொல்லுவேன். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருப்பதாக தான் நான் இதை நினைக்கிறேன்.

சென்னைக்கு மாற்றாக திருச்சியை நிர்வாக தலைநகராக அறிவித்தால் நான் அதை நிச்சயம் வரவேற்பேன். ஏனென்றால் திருச்சி தமிழகத்தின் மையத்தில் உள்ளது. இதனால் மக்கள் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும். கண்டிப்பாக இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது தான். நான் தற்போது தான் பொதுவாழ்விற்கு வந்துள்ளேன். நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இதை ஒரு நினைவூட்டலாக கொண்டு நிச்சயம் இது தொடர்பாக முதல்வரிடம் பேசுவேன்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. அரசியல் சாசன சட்டப்படி ஆங்கிலத்தில் தான் சட்டங்கள் இருக்க வேண்டும். படித்த என்னாலேயே அந்த சட்டத்தை புரிந்து கொள்ள முடியாத போது பொதுமக்கள் நினைவில் கொள்வது மிகவும் சிரமம். சமஸ்கிருதம் கலந்த ஹிந்தியில் அந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அந்த சட்டமே புரியவில்லை. மேலும் அதில் சில மாற்றங்களும் கொண்டுவந்துள்ளனர். இவற்றையெல்லாம் முறையாக சட்ட வல்லுனர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளிடம் கலந்து ஆலோசித்து கொண்டு வர வேண்டும். 150 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இந்த சட்டம் காவல்துறையினர் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கே புரியவில்லை. திடீரென இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பது நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.

முல்லைப் பெரியாறு: கேரளா அரசை பொறுத்தவரை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த அணையால் கேரள மக்களுக்கு உயிருக்கே ஆபத்து என்று பீதியைக் கிளப்பி பொய்யான பிரச்சாரத்தை செய்துள்ளார்கள். இதை அரசியல் ஆக்கிவிட்டார்கள். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் நடந்து கொண்டது கிடையாது. தமிழக அரசு பலமுறை முறையிட்டு இருக்கிறார்கள், இம்முறை நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *