தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் மு.பன்னீர்செல்வம், ஜெ.ஜி.பிரின்ஸ், அரவிந்த் ரமேஷ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் என்பது மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பொக்கிஷங்கள்.
இந்த கோயில்களை சீரமைத்து பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் முதல்வர் ஸ்டாலின் இதுவரை ரூ.425 கோடியை அரசு சார்பில் நிதியாக வழங்கியுள்ளார். இத்துடன் கூடுதலாக உபயதாரர் நிதி, பொதுநல நிதி மற்றும் கோயில் நிதி சேர்த்து ரூ.577 கோடியில் சுமார் 352 கோயில்களில் திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 71 கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதர கோயில்களில் பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.