பள்ளியிலிருந்து புத்தகப் பையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மா்ம நபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், குற்றவாளியைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, குற்றவாளி குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, சிறுமியின் பின்னால் நடந்து செல்வது மற்றும் சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி விடியோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது, தெளிவான புகைப்படம் பதிவான சிசிடிவி காட்சி காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.
ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி எந்தப் பக்கம் தப்பிச் சென்றார் என்று தெரியாமல் இருந்த நிலையிலும், அவர் ஹிந்தியில் பேசியதாக சிறுமி கொடுத்த தகவலின் பேரிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவர்களும் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையை கவனித்து வருகிறார்கள். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி முடித்து வீடு திரும்பிய 4ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, சிசிடிவி கேமராவில் சிக்கியிருக்கும் நிலையில், அதனைக் கொண்டு தேடும் பணி நடந்துவந்த நிலையில், தற்போது அவரது முகம் தெளிவாகத் தெரியும் சிசிடிவி காட்சி சிக்கியிருக்கிறது.