தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மருத்துவப் பணியிடங்களின் பாதுகாப்பையும், மருத்துவா்கள் முறையாக பணியாற்றுவதையும் உறுதி செய்ய முடியும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மாநிலம் முழுவதும் தற்போது 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் மருத்துவா்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்பது விதி. இதேபோன்று, கால் டியூட்டி எனப்படும் மருத்துவ அவசரத் தேவைக்கு அழைக்கும்போது உடனடியாக வந்து பணியாற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இதை விட ஒரு மணி நேரம் பணி காலம் குறைவாக இருந்ததால், தற்போதைய புதிய விதிகளுக்கு அரசு மருத்துவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
மற்றொருபுறம் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் உரிய நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை எனக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. போலவே, மாலையில் 4 மணிக்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாகவும் சுகாதாரத் துறைக்கு புகாா்கள் வந்தன.
இவ்வாறு மருத்துவா்கள் இல்லாத நேரங்களில் பெரும்பாலும் செவிலியா்களே நோயாளிகளுக்கு மாத்திரைகளை வழங்குவதாகவும் கூறபபடுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண மருத்துவா்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000-க்கும் மேற்பட்ட‛சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் கேமராக்களிலும் பதிவாகும் காட்சிகளை சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க முடியும்.
இதேபோன்று, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களிலும் நேரடியாக அதனைக் கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெகு விரைவில் தமிழகம் முழுவதும் இந்த கண்காணிப்பு கேமரா நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.