இந்தியாவின் “பச்சைக் கவசம்’ என்று அழைக்கப்படுகிற ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
‘குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் மற்றும் அதற்குள் மேல் உள்ள நிலபரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும்’ – இந்த வரையறையைக் கடந்த நவம்பர் 20-ம் தேதி, உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இது தான் தற்போதைய கொந்தளிப்பிற்குக் காரணம்.
இந்த வரையறை 90 சதவிகித ஆரவல்லி மலைத்தொடரை பாதிக்கும் என்று சூழலியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க தோண்டல்கள், ஆக்கிரமிப்புகள் நிகழலாம். இதனால், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், பல்லுயிர்தன்மை பெரிதும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆரவல்லி மலைத்தொடர் பற்றி…
இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமான ஒன்று, ‘ஆரவல்லி மலைத்தொடர்’. இது சம்பல், சபர்மதி, லூனி நதிகளின் பிறப்பிடம்.
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் படர்ந்திருக்கும் இந்த மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள் தார் பாலைவனமாக மாறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். இந்த மலைத்தொடர் அந்தப் பகுதியில், ‘இயற்கை சுவராக’ இருந்து வருகிறது.