உயர்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனை மேம்படுத்திடவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களுக்கு ஆராய்ச்சி படிப்பைத் தொடர மாதம் ரூ.25, 000 ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் இடைநிற்றலின்றி உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டம், அதேபோன்று மாணவர்கள் உயர்கல்வி பயின்றிட “தமிழ்ப் புதல்வன்” திட்டம், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 30.8.2022 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், முதல்வர், “நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் “முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை” திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று அறிவித்தார்.