கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பலியான ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்புவதாக, பலியான பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எங்கள் மகள் பெரிய கனவு கண்டாள். ஆனால், அவள் இப்படி இறக்க வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை. அவள் எங்களைவிட்டுச் சென்று 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றளவிலும் நீதி கிடைக்கவில்லை. எங்களிடம் இறப்புச் சான்றிதழ்கூட இல்லை.
ஒரு பெண் மருத்துவர், தனது பணியிடத்தில் பாதுகாப்பற்றவராக இருந்தால், அவரது பாதுகாப்பு எங்குதான் உள்ளது? நான் பிரதமரைச் சந்தித்து, இந்த வழக்கில் தலையிட்டு, இறந்த எங்கள் மருத்துவருக்கு நீதிக்கான எங்கள் முறையீட்டைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.