ஆர்டிஇ மாணவர் சேர்க்கை விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு | Deadline extended for private schools to submit RTE student admission details till Oct. 31

1379771
Spread the love

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்நிலையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில், முந்தைய ஆண்டுகளைப் போல நடப்பாண்டில், 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை என்றும் சில பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஒதுக்கி வைத்திருந்த போதிலும் சில பள்ளிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை முடிந்து இரண்டாம் பருவம் துவங்கியுள்ள நிலையில் தமிழக அரசு இந்த சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தையும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்காததால் நடப்பாண்டில் தாமதம் ஏற்பட்டதாகவும், தமிழகம் முழுவதும் 7,717 பள்ளிகளில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும், அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை வழங்கும் வகையில் மட்டுமே மாணவர்களின் பட்டியல் கோரப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும் தனிப்பட்ட பள்ளிகள் சார்பில் மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டார். கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கும் வகையில் மட்டுமே இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 17-ம் தேதியிலிருந்து அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *