கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி செவ்வாய்க்கிழமை திருமங்கலம் முழுவதும் கடையடைப்பு மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
பெங்களூர் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு மீறி அமைக்கப்பட்டதாகக் கூறி இப்பகுதி பொதுமக்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திருமங்கலம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சுங்கச்சாவடியை புதிதாக தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்ததையடுத்து, அனைவரும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்தது. உள்ளூர் வாகனங்கள் கடந்த பத்தாம் தேதி முதல் 50% மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு மற்றும் பொதுமக்கள் கடந்த பத்தாம் தேதி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.