கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை ஆறாவது முறையாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,347 கன அடி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,225 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1,347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது.
அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.