கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 2 பேரின் குடும்பத்தினர், தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க சென்னை செல்லவில்லை.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பேருந்துகளில் தவெகவினர் அழைத்துச் சென்றனர்.
இதில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த தொகுப்பட்டி புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அஜிதா(21)வின் குடும்பத்தினர் சென்னை செல்லவில்லை. இதுகுறித்து அஜிதாவின் சகோதரர் அமர்நாத்திடம் கேட்டபோது, ‘விருப்பமில்லாததால் செல்லவில்லை’ என்றார்.
இதேபோல, நெரிசலில் உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த பிருத்திக் (10) குடும்பத்தினரும் விஜய்யை சந்திக்கச் செல்லவில்லை. இவரது தந்தை பன்னீர்செல்வம்தான், சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவர் தங்கள் குடும்பத்தை விட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதாகவும், பணத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் சிறுவனின் தாய் சர்மிளா குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை சந்திக்கச் செல்லாதது குறித்து சர்மிளாவின் சகோதரர் சந்துருவிடம் கேட்டபோது, “சகோதரி சர்மிளா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை செல்லவில்லை” என்றார்.