
9-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்தல், 5 மணி நிர்மால்ய தரிசனம், 5.30 மணி அபிஷேகம், 6.05 மணி தீபாராதனை, 6.40 மணிக்கு உஷபூஜை, தீபாராதனை, 8.30 மணி பந்தீரடி, தீபாராதனை, 9.15 மணிக்கு சுத்த புண்யாகம், காலை 9.45 மணிக்கு அடுப்பு வெட்டி பண்டார அடுப்பில் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர். ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்காலையிடுவதற்காக பெண்கள் விரதமிருந்து வருவது வழக்கம். கோயில் வளாகம் மட்டும் அல்லாது திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபடுகின்றனர். அதற்காக அதிகாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்காலையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்காலை மஹோத்ஸவம் நடைபெறும்போது கண்ணகி தேவி பாண்டிய மன்னனை வதம் செய்யும் நிகழ்வு தோற்றம் பாடலாக பாடப்படுகிறது.

மதியம் 2.15 மணிக்கு உச்ச பூஜை, பொங்காலை நைவேத்யம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பொங்கலிட்டபின் நைவேத்யம் அம்மனுக்கு சமர்ப்பிக்கும் விதமாக கோயிலில் இருந்து புனிதநீர் பொங்காலை பானைகள் மீது தெளிக்கப்படும். இதற்காக 350 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 3.10 மணி முதல் இரவு 7 மணிவரை சந்திரகிரகணம் என்பதால் கோயில் திருநடை அடைக்கப்பட்டிருக்கும். இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும். 7.30 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு குத்தியோட்டம், சூரல்குத்து நடைபெறுகிறது. இரவு 10.45 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடக்கிறது.