ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம்: அனுமதி விவகாரத்தில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Case challenging Permit DMK party to protest against Governor: HC orders TN Govt to respond

1347795.jpg
Spread the love

சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவுக்கு விதிகளை மீறி அனுமதியளித்ததாக காவல் ஆணையருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த காவல் துறை ஆணையர் அனுமதி மறுத்துவிட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால், ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதியளித்துள்ளார்.

ஏற்கெனவே ஜன.6 முதல் ஜன.21 வரை 15 நாட்களுக்கு சென்னையில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது என தடை விதித்திருந்த போலீஸார், அனுமதியின்றி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவுக்கு எதிராக மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சிக்கு எதிராகவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசின் உள்துறைச் செயலர், தமிழக டிஜிபி, காவல் துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *