ஆளுநரை நீக்க கோரிக்கை முதல் ஜாட் படத்துக்கு தடை வரை: மதிமுக நிர்வாகக் குழு கூட்ட தீர்மானங்கள் | MDMK rolls out 9 resolution like seeking removal of Governor, ban on Jaat film

1358782.jpg
Spread the love

சென்னை: மதிமுக துணைப் பொதுச்​செய​லாளர் மல்லை சத்யா​வுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.

மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆளுநரை நீக்க வேண்டும், ஜாட் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் -1: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று மதிமுக நிர்வாக குழு விழைகிறது.

தீர்மானம் -2: இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிடவும், உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

1974 ஏப்ரல் 16ஆம் நாள் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை அன்றைய முதல்வர் நிறைவேற்றினார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு மதிமுக நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் -3: மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் 2023 அக்டோபர் மாதத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். எனவே அவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -4: வக்பு சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்தல், சிறுபான்மைச் சமூகங்களை அவதூறு செய்தல், இந்திய சமூகத்தைப் பிரித்தல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்தல் ஆகிய நான்கு கூறுகளை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே இது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்; கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும் .இந்த மசோதாவின் பிரிவு 3-ன்படி, சிறுபான்மையினர் இப்போது தங்கள் மத அடையாளத்தை சான்றிதழ்களுடன் நிரூபிக்க கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். நாளை, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இதைச் செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

இது அரசியலமைப்பின் 26ஆவது பிரிவுக்கு எதிரானது. இன்று சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். நாளை மற்றவர்கள் குறிவைக்கப்படலாம்.

வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரமாரியாக ஒன்றிய அரசிடம் கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்திய நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றியது.

அந்த வரிசையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

மேலும் இந்தியா – இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.அதில் முக்கியமானது, இந்தியா- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். இதன் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும்.

இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான்.

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள ராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து, தாயகத்தை மீட்பதற்கு போராடிய விடுதலை இயக்கத்தை கருவறுத்தது சிங்கள ராணுவம்.

இந்நிலையில் இலங்கை ராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி, தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் 6: தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும், அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மதிமுக நிர்வாகக் குழு வரவேற்று, இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -7: தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில், ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.தமிழீழ விடுதலைக்காக இன்னுயிரை தாரை வார்த்துத் தந்து களத்தில் நின்ற விடுதலைப் புலிகளை கொடூர பயங்கரவாதிகளாக இத்திரைப்படம் சித்தரித்து இருக்கிறது.

திரைக்கதைக்கு தொடர்பே இல்லாத யாழ்ப்பாண புலிப் படை என்ற பெயரில் ஒரு அமைப்பை காட்சியில் இடம்பெற செய்து, விடுதலை வீரர்களையும், தளபதிகளையும் வில்லன்களைப் போல இத்திரைப்படத்தில் காட்டி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -8: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை மே 6ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு கழகத் தோழர்களின் இல்லங்களில் கொடியேற்றுவது, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நல்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் -9: தமிழ்நாடு ஆளுநரை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தை எழுச்சியுடன் முன்னெடுத்து வெற்றிபெறச் செய்யுமாறு கழகத் தோழர்களை இந்த நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *