“ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்” – எல்.முருகன் ஆவேசம் | l murugan slam mk stallin on Tamil Thai Vazhthu issue

1327537.jpg
Spread the love

சென்னை: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி அவதூறு பிரசாரம் செய்யும் திமுக கூட்டணி கட்சிகள், தமிழில் ஒலிபரப்பப்படும் ஒரு சேனலின் பெயரில் தமிழே இல்லாமல் இருந்த நிலையில் டிடிதமிழ் என புகழ் சேர்த்தது மத்திய அரசு. எந்த ஒரு அரசும் தமிழக்கு செய்யாததை செய்தவர் பிரதமர் மோடி. சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத நிறைவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோதே இந்திக்கு விழா எடுப்பதாகவும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி திமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரி பிரதமருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளிலும் இந்தி விழா நடந்தப்பட்டு வந்துள்ளது. நாட்டை பல காலம் ஆண்ட காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இந்தி விழா நடத்தப்பட்டுள்ளது.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் கூட மத்திய அரசின் எல்லா துறைகளிலும் இந்தி விழா நடத்தப்பட்டுள்ளது. இதே சென்னை தூர்தர்ஷனிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தி விழா நடந்தேறியுள்ளது. திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த காலத்திலும் இதே இந்தி விழா நடத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ தற்போது புதிதாக நடந்தது போல திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நேற்று முதலே மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக விஷமப் பிரசாரம் செய்தனர். இந்த விழாவில் ஆளுநர் பங்கேற்றார் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவமரியாதை இழைத்ததாக மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு விழாவிலும் அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவது அனைவருக்கும் தெரியும். இருந்தும் இந்த விவகாரத்தை வைத்து ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்? ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தவறான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதும் மலிவானது. அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல். தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைப்பது ஏற்க முடியாத ஒன்று. ஆளுநர் மீது கடும் அவதூறை பரப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு தமிழக்கு எதிராகவும், இந்திக்கு ஆதரவாகவும் செயல்படுவதாகவும் தொடர்ந்து விஷம பிரசாரம் செய்யும் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு நான் எழுப்பும் கேள்வி இது தான். பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான். தமிழில் ஒலிபரப்பப்படும் ஒரு சேனலின் பெயரில் தமிழே இல்லாமல் இருந்தது. திமுக- காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது இதே அவலநிலை தான் இருந்தது. சென்னை தூர்தர்ஷனை தமிழ் என அடையாளப்படுத்தி தொடங்கி வைத்தது பிரதமர் மோடி. இதை கூட செய்ய திராணியற்றவர்கள் பாஜக மீது சேறுவாரி பூசுவதாக நினைத்துக் கொண்டு தற்போது தங்கள் மீதே சேறு பூசிக்கொள்கிறார்கள்.

1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இந்தியை அலுவல் மொழியாக அறிவித்து விழா எடுத்தது யார்..? இதை அப்போது செய்த பிரதமர் ஜவஹர்லால் நேரு அல்லவா. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முப்பாட்டனார் நேரு காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த இந்தி விழா பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரியுமா தெரியாதா? அப்படி தெரியும் என்றால் தனது தலைவர் ராகுல் காந்தியிடம் இந்த கேள்விகளை கேட்க வேண்டியது தானே? மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசும் தமிழுக்கு செய்யாததை செய்தவர் மோடி. உலகின் மிக மூத்த தொன்மையான, இனிமையான மொழி தமிழ் என்பதை உள்ளூரில் தொட்டு ஐ.நா மன்றம் வரை சென்று உரக்க சொன்னவர் பிரதமர். செல்லுமிடங்கள் எல்லாம் தமிழின் பெருமையை பேசி வருபவர்.

தெய்வப் புலவர் திருவள்ளூர் தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய நமது முன்னோர்களை எல்லாம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெருமையுடன் பேசி புகழ் சேர்த்து வருபவர். காசி தமிழ் சங்கமம், பனாரஸ் இந்து பல்கலையில் பாரதியாருக்கு இருக்கை என தமிழின் புகழை பறைசாற்றி கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் என வெளிநாட்டு பல்கலைக்கழங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பாஜக ஆட்சியில் தான். தமிழ் மொழி மனித குலத்துக்கு வழங்கிய அருட்பெரும் கொடைகளான திருக்குறள் உள்ளிட்ட நூல்களை பிற மொழியில் மொழி பெயர்த்து தமிழின் பெருமைய உலகறிய செய்து வருபவர் பிரதமர். தமிழுக்காக மோடி ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒன்றையாவது சொல்ல முடியுமா?

அதுபோலவே நாட்டின் தொன்மையான, வளமான, உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப ஆளுநர் ஆர்.என்.ரவியும், ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறார். அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களை திசை திருப்புவதன் மூலமும், வழக்கமான ஒன்றை மடைமாற்றுவதன் மூலமும் அரசியல் செய்ய முடியுமா என மு.க.ஸ்டாலினும், திமுக கூட்டணிக் கட்சியினரும் எண்ணுகின்றனர். ஆனால் இவர்களின் கபட எண்ணங்களை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை” என அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *