ஆளுநர் உரையுடன் ஜன.6-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது | TN assembly will begin on Jan 6

1344078.jpg
Spread the love

சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முடித்து வைத்தார். இந்நிலையில், வரும் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது:

சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஜனவரி 6-ம் தேதி கூட்டியுள்ளார். அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்ற உள்ளார். கடந்த முறை உரையின் முதல் பக்கம் மற்றும் கடைசி பக்கத்தை வாசித்தார். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம். மாநிலத்தின் முதல் குடிமகன் என்பதால் பேரவையில் உரையாற்ற வருமாறு அவரை அழைக்கலாமே தவிர, முழுமையாக பேசுமாறு வலியுறுத்த முடியாது.

அரசியலமைப்பு சட்டத்தின் 176-வது பிரிவின்படி, சட்டப்பேரவையில் உரையாற்ற மட்டுமே ஆளுநருக்கு அனுமதி உள்ளது. கருத்து சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே சட்டப்பேரவையில் கருத்து சொல்ல அனுமதியுள்ளது. முதல்வர், அமைச்சரவை கூடி எழுதிக் கொடுப்பதைதான், ஆளுநர் வாசிக்க வேண்டும். உரையை தயாரித்து அவரது கவனத்துக்கு அனுப்பிதான் வாசிக்க சொல்கிறோம். அதை விட்டுவிட்டு, சொந்த கருத்துகளையோ, பிரச்சினைகளையோ சொல்ல உரிமை இல்லை. இதை அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. எனினும், ஆளுநருக்கு உரிய மரியாதையை அரசு அளிக்கும்.

சட்டப்பேரவை கூட்டத்தை 100 நாட்கள் நடத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், நாட்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்தது பற்றி கேட்கிறீர்கள்.

கடந்த 2011-2021 காலகட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கூடுதல் செலவினத்துக்கான மசோதாவைதான் நிதி அமைச்சர் அறிமுகம் செய்வார். அதன் மீது விவாதிக்க பெரிய அளவு பொருள் இருக்காது.

மேலும், இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் பேரவை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த இயலவில்லை. தேர்தல் அறிவித்த பிறகு, சட்டப்பேரவை நடத்த இயலாது. வெள்ளம், மிகப்பெரிய பாதிப்புகள் வரும்போது அரசு இயந்திரம், அமைச்சர்கள் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் குறைந்த அளவு நாட்கள் நடத்தப்பட்டது. எனவே, இருக்கும் சூழலுக்கு ஏற்ப சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். குறைவான நாட்கள் நடந்ததால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்த குறையும் இல்லை.

பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி தரப்பில் விமர்சிக்கின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என அனுமதிக்கப்பட்டது. அவர் பேசி முடித்த பிறகே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் அந்த விவாதம் நீண்டது. முன்கூட்டி அறிவிக்காமல், நேரமில்லா நேரத்தில் முல்லை பெரியாறு அணை பற்றி பேசினார். அவர் பேச எந்த தடையும் விதிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *