ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – உச்ச நீதிமன்றம் | இந்தியா

Spread the love

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா, சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு அணுகிய நிலையில், இந்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

சட்டப்பேரவையில் அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து, மீண்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு, ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என அறிவித்து உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவிட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தனர்.

மேலும், சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கடந்த மே 13 ஆம் தேதியன்று அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, மத்திய அரசு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் அவசியமானது எனவும், ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் விரும்பும் வரை மசோதாக்களை கையில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்டது. இதேபோன்று கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தன.

மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தின் இந்த காலக்கெடு நிர்ணயம் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முறையிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணையை முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக் காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பான வழக்கில் அவர் அளிக்கப்போகும் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாச்சிக்கு எதிரானது. மசோதாவை நிறுத்தி வைத்தால் அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். மசோதாக்களை ஏற்பதில் மாநில அரசின் ஆலோசனையை ஆளுநர் ஏற்க வேண்டியதில்லை. மசோதாவை ஆளுநர் காலவரம்பின்றி நிறுத்திவைக்க முடியாது. குடியரசுத்தலைவருக்கு மசோதாவை அனுப்ப மட்டுமே ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அந்த அமைச்சரவையயும் மட்டுமே முடிவுகள் எடுப்பதில் முக்கியத்துவம் பெறமுடியும். மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்றும் மத்திய அரசு கூறுவது போல் ஆளுநருக்கு 4 ஆவது வாய்ப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *