தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தல் சூடு பரவியிருக்கிறது.
தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பதவிக்காலம் மே 7, 2026 அன்று முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆளுநர் மாளிகை மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகிய இரு உயரிய அரசியலமைப்பு பதவிகளும், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜக இடையிலான அரசியல் மோதலுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
.png?q=75&auto=format%2Ccompress)
கடந்த மார்ச் 5-ம் தேதி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் யாரும் எதிர்பாராத விதமாகத் தனது ராஜினாமாவை அறிவித்தார். இது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருக்குப் பதிலாக, தமிழ்நாட்டில் தி.மு.க அரசுடன் தொடர் மோதல்களை உருவாக்கிய ஆளுநரும், முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த மாற்றம் நடந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.