ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
குறிப்பாக, தமிழகத்தில் நான்கு மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த ஒருவாரத்திற்குள் மிக முக்கியமான சில அதிகாரிகளும் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “தேர்தல் பாரபட்சமற்ற முறையில் நடைபெற, அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் தீரஜ் குமார், அமுதா, ககன்தீப் சிங் பேடி, ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் மாற்றிட வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.
அதேசமயம், அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகளிடமிருந்தும் சில அதிகாரிகளை மாற்றிட தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை சென்றுள்ளது. இந்தச்சூழலில், தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி டெல்லிக்கு கொடுத்த பட்டியலின் அடிப்படையில்தான், தற்போது அதிகாரிகள் மாற்றம் நடைபெறப் போவதாகச் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள்.

அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தற்போது மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தமிழகத்திலிருந்து கிளம்பும் முன்பாக, ஒரு பெரிய பட்டியலையே டெல்லிக்கு அனுப்பிவிட்டார்.
அதில், “எந்தெந்த அதிகாரிகளெல்லாம் தி.மு.க அரசுக்கு சார்பாக இருக்கிறார்கள், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் என்னென்ன பாதிப்புகள் வரும்’ என்பதைத் தெளிவாக டெல்லி உள்துறைக்கு ‘நோட்’ போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி. கிட்டத்தட்ட மூன்று மாதம் பல்வேறு தரப்பினரிடமும் கலந்தாலோசித்துதான் அந்தப் பட்டியலைத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.