சென்னை: ‘கிட்னி முறைகேடு விவகாரத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா’ என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அந்நிறுவனம் மீது ஏற்கெனவே பலமுறை முறைகேடுகளுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும்கூட திமுக அரசு அந்நிறுவனத்தை கண்காணிக்க தவறியதால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மருந்து குறித்து மத்தியப்பிரதேச மருந்து கட்டுப்பாட்டுத் துறை, கடந்த அக்.1-ம் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியும், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்துள்ளது என மத்தியப்பிரதேச அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் கிட்னி முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர்களைத்தான் அரசு கைது செய்துள்ளது.
ஆனால், இந்த முறைகேடு நடைபெற்ற தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அது ஆளும் திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் நெல் மூட்டைகள் சாலைகளில் குவிக்கப்பட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று விவசாயிகளைக் காத்தோம். ஆனால், இந்த அரசு அதை செய்யாததால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுக ஆட்சியைவிட மத்திய அரசிடமிருந்து வரிப்பகிர்வு மற்றும் திட்ட நிதி மூலம் திமுக அரசுக்கு ரூ.99 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளது. இவ்வளவு நிதி வந்தும் திமுக அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்போவதாக தொழில்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகமே அப்படி எந்த முதலீடும் செய்யப்போவதில்லை என மறுத்துள்ளது. இதுபோல வெற்று அறிவிப்புகளையும், பொய் அறிவிப்புகளையும் வெளியிட்டு மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
‘உருட்டுக்கடை அல்வா’ திமுக அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை விமர்சிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.க்கள் ‘திமுக உருட்டு கடை அல்வா’ என அச்சிடப்பட்ட அல்வா பாக்கெட்டுகளை சட்டப்பேரவை வளாகத்தில் வழங்கினர். அதை அல்வா என நினைத்து அங்கிருந்தவர்கள் ஆவலுடன் வாங்கி பார்த்தபோது அதில் பஞ்சு மட்டுமே இருந்தது. ‘மக்களுக்கு இப்படிப்பட்ட அல்வாவைத்தான் இந்த அரசு கொடுக்கிறது’ என்று பழனிசாமி கிண்டலாகக் குறிப்பிட்டார்.