ஆழ்கடல் மர்மம்: 3000 அடி கீழே இருந்து கரைக்கு வந்த ‘ராட்சத நாகங்கள்’ | Doomsday Fishes வீடியோ!

Spread the love

மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் (Cabo San Lucas) கடற்கரைக்குச் சுற்றுலா சென்றவர்களுக்கு அண்மையில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆழ்கடலில் மட்டுமே வாழக்கூடிய, “ஓர்ஃபிஷ்’ (Oarfish) எனப்படும் இரண்டு ராட்சத மீன்கள் திடீரென கரைக்கு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தன.

சுமார் 30 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், ரிப்பன் போன்ற நீண்ட உடலையும், தலையில் சிவப்பு நிற கொண்டை போன்ற துடுப்பையும் கொண்டு பார்ப்பதற்கே ஒரு கடல் நாகத்தைப் போல காட்சியளித்தன.

இந்தக் காட்சியைக் கண்ட மோனிகா பிட்டிங்கர் என்ற பெண்மணியும் அவரது சகோதரியும் முதலில் திகைத்துப் போனார்கள். அந்த மீன்கள் ஆழமற்ற நீரில் நீந்த முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.

பொதுவாக மக்கள் இதைப் பார்த்து அச்சமடைந்த நிலையில், மோனிகாவின் சகோதரி துணிச்சலுடன் தண்ணீரில் இறங்கி, அந்த மீன்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிவிட உதவினார். ஒரு மீனைக் காப்பாற்றிய சில நிமிடங்களிலேயே, மற்றொன்றும் அங்கே தென்பட்டது அங்கிருந்தவர்களை வியப்பிலும் பீதியிலும் ஆழ்த்தியது.

ஜப்பானிய கலாசாரத்தில் இந்த மீன்கள் ‘ரியுகு நோ சுகாய்’ (Ryugu no tsukai) என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு ‘கடல் கடவுளின் அரண்மனையிலிருந்து வந்த தூதுவன்’ என்று பொருள். ஆழ்கடலில் 3,000 அடிக்கும் கீழே வாழும் இந்த மீன்கள் கடல் மட்டத்திற்கு வந்தால், அது ஒரு பெரிய இயற்கை பேரழிவுக்கான (நிலநடுக்கம் அல்லது சுனாமி) அறிகுறி என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது.

குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு முன்பு, இது போன்ற பல மீன்கள் கடற்கரையில் ஒதுங்கியது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *