ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்பனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழுவதும் சேதமடைந்தது.
இதில், தீபாவளிக்கு பட்டாசு வாங்க வந்த திருநின்றவூர் நத்தம்மேடு பகுதியை சேர்ந்த சுனில்பிரகாஷ்(22), யாசின்(28) மற்றும் நாட்டு வெடி விற்பனையில் ஈடுபட்ட இருவர் என 4 பேர் தீக்காயமடைந்தும், இடிபாடுகளில் சிக்கியும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த பட்டாபிராம் போலீஸார் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் பெரோஸ் அப்துல்கான், ஆவடி வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.
ஆவடி காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டு வெடிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்று விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும்” என்றார். இந்த விபத்து தொடர்பாக பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.