மதுரை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு ஆவணங்களின் தமிழ் நகல் உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருப்பதால் அதிகளவில் குண்டர் தடுப்புக் காவல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு குண்டர் தடுப்பு சட்ட காவல் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரும் ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக மனுக்களை நீதிபதிகள் புதன்கிழமை விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், “குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு, குண்டர் தடுப்புச் சட்ட காவல் உத்தரவு தொடர்பான ஆவணங்களின் தமிழ் நகல் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்ட காவல் உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்களின் விசாரணையின் போது, குண்டர் தடுப்பு சட்ட காவல் உத்தரவின் தமிழ் நகல் கைது செய்யப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, உத்தரவும் பிறப்பித்துள்ளது. உரிய நேரத்தில் தமிழ் நகல் வழங்கப்படாத காரணததால் ஏராளமான குண்டர் தடுப்புச் சட்ட காவல் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளர், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முன்பாக இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக உள்துறை துணைச் செயலாளர், தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.