வங்க தேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, ஆவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்டில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர்.
ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர் போராட்டக் குழுவினர் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இடைக்கால அரசு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் “ஜூலை சாசனம்’ (July Charter) என்ற பெயரில் `பிரதமரின் அதிகாரத்தைக் குறைத்தல், பதவிக் கால நிர்ணயம்’ போன்ற புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது.
இந்த நிலையில்தான் வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 300 நாடாளுமன்றத் தொகுதியில், வங்க தேசத்தில் ஆட்சி அமைக்க 151 இடங்களில் வெற்றிப்பெற வேண்டியது அவசியம்.