மற்றவர்கள் எதை “மறுசுழற்சி செய்ய முடியாதது” என்று ஒதுக்கினார்களோ, அதை நான் “தவறான இடத்தில் இருக்கும் ஒரு பொருள்” என்றுதான் பார்த்தேன். “கழிவு என்பது தவறான இடத்தில் இருக்கும் ஒரு வளம்” என்ற புரிதலே Circular Seed-ன் அடித்தளமானது. சமூகத்திற்கு எதையாவது திரும்பச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஆனால் அதை ஒரு தர்மமாகச் செய்யாமல், கழிவு உருவாகும் இடத்திலேயே அதை மதிப்பாக மாற்றும் ஒரு நடைமுறைத் தீர்வை உருவாக்க விரும்பினேன்.
“எப்படிச் சிறப்பாக மறுசுழற்சி செய்வது?” என்று யோசிப்பதை நிறுத்திவிட்டு, “கழிவு உருவாகும் இடத்திலேயே செயல்படக்கூடிய சிறிய, மலிவான தொழில்நுட்பங்களை எப்படி வடிவமைப்பது?” என்று யோசித்தபோதுதான் எங்களுக்குப் பெரிய மாற்றம் கிடைத்தது.
அந்தச் சிந்தனைதான் எங்களை ‘மாடுலர்’ (Modular) மற்றும் எங்கும் கொண்டு செல்லக்கூடிய சிறிய ஆலைகளை (Micro-factories) உருவாக்கத் தூண்டியது. இப்படித்தான் இதுவரை 8-க்கும் மேற்பட்ட சிறிய சுத்திகரிப்பு ஆலைகளை உருவாக்கி எந்த இடத்தில் கழிவுகளை சுத்திகரிக்க முடியுமோ அவற்றை சுத்திகரித்து தந்துவருகிறோம். இவை கிராமங்கள், தீவுகள் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே இயங்கக்கூடியவை. இந்த செயல்பாடுகளால் கடலில் வீணாக்கும் மீன் பிடி வலைகளை மொத்தமாக எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்ய கேட்டிருக்கிறார்கள்.
இன்று, Circular Seed இவற்றையெல்லாம் மாற்றுகிறது:
* குறைந்த மதிப்புள்ள பிளாஸ்டிக்குகளை கட்டுமானக் கற்களாக மாற்றுகிறோம்.
* கலப்பு பிளாஸ்டிக்குகளை எரிசக்தியாகவும் எரிபொருளாகவும் மாற்றுகிறோம்.
* மட்கும் கழிவுகளை உரமாக மாற்றுகிறோம்.
ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக, நாங்கள் மக்களின் சிந்தனையை மாற்றுகிறோம்:
* “கழிவு ஒரு பிரச்சினை” என்பதிலிருந்து “கழிவு ஒரு வாய்ப்பு” என்பதற்கு மாற்றுகிறோம்.
* “பெரிய முதலீடு தேவை” என்பதிலிருந்து “சிறியதாகத் தொடங்குங்கள், உள்ளூரிலேயே தொடங்குங்கள், இப்பொழுதே தொடங்குங்கள்” என்று வழிகாட்டுகிறோம்.
நாங்கள் சரியான முதலீட்டிற்காகவோ அல்லது ஆபத்துகள் இல்லாத ஒரு நேரத்திற்காகவோ காத்திருக்கவில்லை. முன்மாதிரிகள் (Prototypes), சோதனைகள், தோல்விகள் மற்றும் விடாமுயற்சியுடன் இதைத் தொடங்கினோம். பலரிடம் அறிவு இருக்கிறது, ஆனால் முதலீடு மற்றும் ரிஸ்க் குறித்த பயத்தால் தயங்குகிறார்கள். அத்தகையவர்களுக்கு இந்த ‘ஸ்டார்ட்அப் சாகசம்’ (Startup Sagasam) தொடர் ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு முக்கியமான விசயம், குப்பை என்பதால் அது மதிப்பு இல்லை என்றாகிவிடாது, அதை பணத்தால் மட்டும் எண்ணக்கூடாது. அது சமூகத்தில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற சமூக மதிப்பை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். நாம் எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே கணக்கிடுகிறோம்.”