அவரிடம் ஒரு சீரான தன்மை இருக்காது என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு. வெஸ்ட் இண்டிஸூக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களௌ விளாசியிருந்த சாம்சன், இந்தப் போட்டியிலும் அதே பார்மில் அப்படியே தொடர்ந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே புல் ஷாட்டோடு ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து பாசிட்டிவாக தொடங்கினார்.
அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், எந்த சுணக்கமும் இல்லாமல் சாம்சன் அப்படியே அதே வேகத்திலேயே ஆடினார். இஷான் கிஷனும் அவருக்கு ஒத்துழைத்து அதிரடி காட்டினார். சாம்சனை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு பௌலர்களை ப்ரூக் பவர்ப்ளேயில் பயன்படுத்தியிருந்தார். எந்த வியூகமும் சாம்சனுக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகவில்லை. இடையில் ஒரு கேட்ச் ட்ராப் வேறு.
க்ரீஸை நன்றாக பயன்படுத்தி பின்னங்காலை நன்றாக ஊன்றி ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஸ்லோயர் ஒன்களையும் அநாயசமாக சிக்சராக்கினார். சதத்தை நோக்கி நகர்வார் என நினைக்கையில் 89 ரன்களில் வில் ஜாக்ஸின் பந்திலேயே அவுட் ஆகினார். இந்தப் போட்டியிலும் “ஆட்டநாயகன்’ விருதை தட்டிச் செல்லும் பெர்பார்மென்ஸ் இது..
ஆதில் ரஷீத், வில் ஜாக்ஸ் வீசியதால் துபே பிரமோட் ஆகி மேலே ஆட வந்தார். அவரும் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து ரன் அவுட் ஆகியிருந்தார். கடைசியில் திலக் வர்மா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது. கடைசியில் ஹர்திக்கும் சில சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை எடுத்தது.இங்கிலாந்தின் பிரதான பௌலரான ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ரன்களை கொடுத்து அடி மேல் அடி வாங்கியிருந்தார்.
இங்கிலாந்துக்கு 254 ரன்கள் டார்கெட். இமாலய சவாலில் சாதிக்குமா?