தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும் தொடர்புடைய சாலைகளுக்கு அவர்களின் பெயரைச் சூட்டி பெயர்ப்பலகைகளை இன்று திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இது இசை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1. எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை (முன்பு டிமாண்டி சாலை)
“மெல்லிசை மன்னர்’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் (MSV) அவர்கள், தமிழ் திரையிசையின் பொற்காலத்தை உருவாக்கியவர். அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு (Demonte Road), இனி ‘எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2. சீர்காழி கோவிந்தராஜன் சாலை (முன்பு மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலை)
வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரரான இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பக்தி இசை மற்றும் திரை இசையில் தனி முத்திரை பதித்தவர். மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு, ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. திருச்சி லோகநாதன் சாலை (முன்பு மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெரு)
‘வாராய்… நீ வாராய்…’, ‘ஆசையே அலைபோலே’ போன்ற தத்துவப் பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் சென்னையில் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு, ‘திருச்சி லோகநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.