“இடஒதுக்கீடு குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” – எல்.முருகன் காட்டம் | L murugan slam vck leader thirumavalavan on reservation issue

1329092.jpg
Spread the love

சென்னை: “இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ்காரர் என கூறியுள்ளார். நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம். அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அஞ்சல் தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா?

கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்றுதான் பாஜக பணியாற்றி வருகிறது. ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும்.

அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா?. தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது யூகங்கள்தான். தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *