சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திருவொற்றியூர் எஸ். மணிகண்டன் உள்ளிட்ட 50 வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சக நீதிபதிகள், சென்னை, கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், தமிழக, கேரள ஆளுநர்கள், மக்களவைத் தலைவர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த ஜெ.நிஷாபானுவை கேரளா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆக.26-ம் தேதி மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதையேற்று, நீதிபதி நிஷாபானுவை கேரளாவுக்கு இடமாற்றம் செய்து கடந்த அக்.13-ம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
ஆனால், கடந்த 3 வாரங்களாக அவர் கேரளா உயர் நீதிமன்றத்துக்கு சென்று பதவியேற்கவில்லை. சென்னையிலும் அவர் தனது பணியை அக்.14 முதல் நிறுத்திவிட்டார். பொதுவாக நீதிபதிகள் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வார காலத்துக்குள் பதவியேற்று விடுவர்.
ஆனால், நீதிபதி நிஷாபானு மட்டும் 3 வாரங்களுக்கு மேலாக அண்டை மாநிலமான கேரளா உயர் நீதிமன்றத்துக்கு சென்று பதவியேற்காமல் இருப்பது என்பது ஒட்டுமொத்த நீதித்துறையையும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தையும், நீதித்துறையின் கட்டமைப்பு மற்றும் மாண்பையும் அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, நீதித்துறையில் மோசமான முன்னுதாரணமாகி விடும்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகிப்பதால், தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார்.
எனவே, நீதித்துறையின் நலன் கருதி அவரை உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கும் நீதிபதி நிஷாபானுவுக்கும் எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நீதித்துறை மீதுள்ள மரியாதை காரணமாக இந்த கடிதத்தை அனுப்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.