அதுவரை எங்களை அழைத்துச்சென்ற உறவினர் , எங்களுக்கே தெரியாமல் வேஷ்டியில் சுருக்கி சுற்றி வைத்திருக்கும் இரண்டு ரூபாய் (!) பண்டல்களை பிரித்து , அவரவர்களின் வீட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ரூபாய் 2, 4, 6, 8 என்று எண்ணிக்கைக்கு தகுந்தவாறு இரண்டு ரூபாய் தாள்களை கொடுத்து.. மறக்காமல் நம்ம கட்சிக்கு ஓட்டு போடுங்க .. போன முறையே தோத்துட்டோம் இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று சொல்வார்.
எங்களுக்கு அப்போதெல்லாம் இது ஓட்டுக்கு பணம் என்பது புரியாது. இதேபோன்று கிட்டத்தட்ட ஆறு ஏழு நாட்களுக்கு மேலாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி வந்து கட்சி சார்பாக ஓட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுத்து முடித்து விட்டார் .
தினசரி இந்த பண பட்டுவாடா முடிந்தவுடன் எங்களுக்கு நாலணா , எட்டணா என்று கொடுத்து தின்பண்டம் வாங்கிக்க சொல்வார்.
என்னதான் இப்படி பண பட்டுவாடா நடந்தாலும் ,அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.பி.மணவாளன் தான் வெற்றி பெற்றார்.

கொஞ்சம் விவரம் தெரிந்து எங்களுக்கு வாக்குரிமை கிடைத்த பிறகு பழைய நினைவுகளை நினைக்கும் போது…தெரியாமலேயே ஒரு தவறான விஷயத்திற்கு நம்மை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம்.
அதன் பிறகு மாநிலத்தில் ஆங்காங்கே எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எனக்கு திருப்பத்தூர் இடைத்தேர்தல் மனதில் நிழலாடும்.
என்னதான், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற திருமங்கலம் ஃபார்முலா , இருபது ரூபாய் டோக்கன் என்ற ஆர் .கே. நகர் பார்முலா என்று காலத்துக்கு ஏற்றபடி கவனிப்புகள் மாறிக்கொண்டே வந்தாலும்
1985 ம் ஆண்டு கால கட்டத்திலேயே ஓட்டுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்கு சேகரித்த அகராதி திருப்பத்தூர் இடைத்தேர்தலுக்கு உண்டு என்பதை அறியாத வயதில் கண்டு புரியும் வயதில் தெரிந்துகொண்டோம்.
இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒரே நேரத்தில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் பூங்குளம் கிராமத்திற்குள் நுழைய , ஆளுங்கட்சி கெத்தில் அமைச்சர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட எதிர்கட்சி என்பதால் டி.ராஜேந்தர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டதால் இரண்டு கட்சியினருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
கடைசியில் ஊர் எல்லையில் நின்றவாறு பேசிய டி.ராஜேந்தர் ஆளுங்கட்சியின் அசுர பலத்தை சுட்டி காட்டி பணக்கார வீட்டு கல்யாணத்தில் போய் பத்து ரூபாய் மொய் வைப்பதை காட்டிலும் (எதிர் கட்சிகளுக்கு குறைவான எம்.எல்.ஏ க்கள் இருப்பதை சுட்டி காட்டி) ஏழை வீட்டு கல்யாணத்தில் இரண்டு ரூபாய் மொய் வைப்பது எவ்வளவோ மேல் .. கடைசிவரை நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்று சென்டிமென்டலாக பேசியதை அனைவரும் கை தட்டி ரசித்தது ஞாபகம் இருக்கிறது.
இடைத்தேர்தல்களில் உருவாகும் பல்வேறு பார்முலாகளுக்கு இந்த இரண்டு ரூபாய் பார்முலா தான் முன்னோடி என்பது என்னை போன்றவர்களுக்கு பிற்பாடு புரிந்தது .
–அதிஷ்யன் மேதாவி