இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Vikravandi

1276785.jpg
Spread the love

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து, தொகுதிக்குள் இருந்த வெளிநபர்கள் வெளியேறினர்.

விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செஞ்சி மஸ்தான், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களம்காணும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன், ஐஜேக தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தனித்து களம்காணும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நேற்று நிறைவு நாள் என்பதால் பிரச்சாரக் களம் பரபரப்பாக காணப்பட்டது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த பொதுக் கூட்டத்திலும், பாமக தலைவர் அன்புமணி, கெடாரிலும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரத்தூரிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் அல்லாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்குள் இருக்க கூடாது. வெளிநபர்கள் அனைவரும் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கான உத்தரவை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியும் பிறப்பித்தார். அதனால், விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் தங்கி உள்ளனரா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளன. மேலும் பதற்றமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திர நாயர் மேற்பார்வையில் டிஐஜி திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு காவல் படையினர், 220 துணை ராணுவத்தினர் உட்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான ஜூலை 13-ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *