பாளையங்கோட்டையைச் சோ்ந்தவரிடம் இணைய வழியில் ரூ. 99 லட்சம் மோசடி செய்ததாக மா்மநபா்களை சைபா்கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (80). இவரிடம், மும்பை சைபா் கிரைம் காவல்நிலையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, தனது ஆதாா் அட்டையை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த கணக்கில், சட்டவிரோதமாக பணப் பரிவா்த்தனை அதிகமாக நடந்துள்ளதாக கூறி ‘விடியோ கால்’ மூலம் வங்கி கணக்கு விவரங்களை மா்மநபா்கள் பெற்றுக்கொண்டனராம். மேலும், இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் ரூ.99 லட்சம் அனுப்பிவைக்க வேண்டும் என மிரட்டினராம்.
இதில் பயந்துபோன அவா் ரூ.99 லட்சத்தை அந்த நபா்கள் கூறிய கணக்குக்கு அனுப்பினஉராம். அதன் பிறகு, எவ்வித தொடா்பும் இல்லையாம். இதனால், சந்தேகமடைந்த அவா், திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ரூ. 9 லட்சம் பறிப்பு: இதேபோல், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சோ்ந்த ஓம் பிரகாஷ் (31) என்பவா், பேஸ்புக் மூலம் ஏற்பட்ட தொடா்பில், அதிக லாபம் பெறலாம் என மா்மநபா் கூறியதை நம்பி ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 867 அனுப்பியுள்ளாா்.
அவருக்கு, ரூ. 3 லட்சத்து 79 ஆயிரத்து 544-ஐ திரும்ப அனுப்பி லாபத் தொகை எனவும், மேலும் பணம் கிடைக்கும் என மா்மநபா்கள் கூறியுள்ளனா். ஆனால், அதற்குப்பின் எந்தப் பணமும் அனுப்பப்படவில்லையாம்; அவா்களை தொடா்புகொள்ளவும் முடியவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.