தமிழ்நாட்டில் நேற்று டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நிகழ்ந்து விட்டது, வருந்துகிறோம்’ என ஒற்றை வார்த்தையில் அறிவித்து விட்டது தேர்வாணையம்.
அரசும் உடனடியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு புதிய அதிகாரியை நியமித்திருக்கிறது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் என்பது மிகவும் முக்கியமான பணிகளுக்கான தேர்வாகும். அரசுத் துறைகளில் முதன்மையான குரூப் 1 க்கு அடுத்தபடியான தேர்வு. அரசுத் துறை செயலாளரகளின் தனி உதவியாளர், சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவி வரி ஆணையர் உள்ளிட்ட பல பணியிடங்களூக்கு இந்த தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பிரிலிமினரி, மெயின் என இரு = கட்டங்களாக நடக்கும். முதல்கட்டத் தேர்வான பிரிலிமினரி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள், மெயின் தேர்வில் 2 அல்லது 2 ஏ இரண்டில் எதை எழுத வேண்டுமென்பதை தீர்மானிக்குமென்கிறார்கள்.
மெயின் தேர்வில் தகுதி பெற்று விட்டால் நேர்முகத் தேர்வே கிடையாது. உடனடியாகப் பணி தான்.
இத்தகைய முக்கியமான தேர்வுக்கு வருடக் கணக்கில் பயிற்சி எடுத்துத் தயாராகிறார்கள் தேர்வர்கள்.
சில துறைகளில் நடக்கும் நேரடி ஆள் சேர்ப்பு மூலம் வேலையில் சேர்வது என்பது சாதாரண மற்றும் பொருளாதர ரீதியாக பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கு இயலாத ஒன்றாகி விட்டது. இத்தகைய பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. ஆளுங்கட்சிக்காரர்களுக்கு மட்டுமே இந்த வேலைகள் கிடைக்குமென்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு.
எனவேதான் நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையாக நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே 1000 காலியிடங்கள் என்றால் ஐந்து லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கிறார்கள்.