இதய நோயாளிகள்… ஒருவேளையோ, ஒரு நாளோ மருந்துகளைத் தவறவிடுவது ஆபத்தாகுமா? | Is it dangerous for heart patients to miss a dose or a full day of medication?

Spread the love

இதயத்துடிப்பு சீராக இருக்க, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க, கெட்ட கொழுப்பின் (Cholesterol) அளவு குறைய, ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு அல்லது அடைப்பு ஏற்படாமல் இருக்க, மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் (Stroke) அபாயம் குறைய மருந்துகள்  தொடர்ந்து உடலில் இருக்க வேண்டும்.
ஒரு நாள், இரண்டு நாள்கள் தவறவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி உங்களைப் போலவே நிறைய பேருக்கு உண்டு. 

சில மருந்துகளைத் தவறவிடுவதால் சிறிய மாற்றங்கள் மட்டுமே இருக்கும், உடனடி ஆபத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சில முக்கிய மருந்துகளில், உதாரணமாக… ரத்த அழுத்த மாத்திரை, ரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகள்,  இதயத் துடிப்பை சீராக்கும் மருந்துகள் (Irregular beating) போன்றவற்றை ஒரு நாள் தவறவிட்டால்கூட  பாதிப்பு ஏற்படும். ரத்த அழுத்தம் திடீரென அதிகமாகலாம், இதயத்துடிப்பு சீர்குலையலாம். இவற்றின் தொடர்ச்சியாக  மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயம் ஏற்படலாம்.

எனவே, ரத்த அழுத்த மருந்துகள், பிளட் தின்னர் (Blood thinner) என்று சொல்லக்கூடிய ரத்தத்தை உறையச் செய்யாமல் தடுக்கும் மருந்துகள், இதயத் துடிப்பை சீராக்கும் மருந்துகள், கொலஸ்ட்ரால் மருந்துகள் ஆகியவற்றை  தவறாமல் ரெகுலராக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 சாப்பாட்டு மேஜை (Dining table) மேலேயே பில் பாக்ஸ் (Pill box) எனப்படும் மாத்திரை டப்பாவை வைக்க வேண்டும்.

சாப்பாட்டு மேஜை (Dining table) மேலேயே பில் பாக்ஸ் (Pill box) எனப்படும் மாத்திரை டப்பாவை வைக்க வேண்டும்.
ILONA SHOROKHOVA

ஒருவேளை மறதியின் காரணமாகவோ, வேறு காரணங்களாலோ மருந்தை எடுக்காமல் விட்டுவிட்டால் உங்களுக்கு நினைவு வந்த உடனே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடுத்த டோஸ் (Dose) எடுத்துக்கொள்ளும் நேரம் நெருங்கி இருந்தால், இரண்டு டோஸையும் சேர்த்து வேண்டாம்.  ஒரு டோஸே போதும். சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு எடுக்கலாம். 

மருந்துகளை மறக்காமல் எடுத்துக்கொள்ள சில உத்திகளைப் பின்பற்றலாம். உதாரணத்துக்கு,  சாப்பாட்டு மேஜை (Dining table) மேலேயே பில் பாக்ஸ் (Pill box) எனப்படும் மாத்திரை டப்பாவை வைக்க வேண்டும்.  இது சாப்பாட்டுக்கு முன்னாடியோ, சாப்பாட்டுக்குப் பின்னாடியோ மருந்து எடுத்துக்கொள்வதை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும். மொபைல் அலாரம் (Mobile Alarm) வைத்து  சரியான நேரத்துக்கு மருந்து சாப்பிடலாம்.  வீட்டில் யாரையாவது நினைவூட்டச் சொல்லலாம். நினைவாற்றல் குறைந்த தாத்தா- பாட்டிக்கு, வீட்டிலுள்ள பேரன், பேத்திகளோ, பிள்ளைகளோ நினைவுபடுத்தி, எடுத்துக்கொடுக்கலாம். 

எக்காரணம் கொண்டும் மருந்துகளை நிறுத்துவது அல்லது மாற்றுவது அல்லது குறைப்பது போன்ற விஷயங்களை மருத்துவர் சொல்லாமல் செய்யக் கூடாது.  இதய மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகள். ஒருநாள் தவறினாலும் சிலருக்கு அது ஆபத்தை  ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *