மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நோயாளிகளைக் கூட, ஒரு நாள் படுக்கை ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் படுக்கையில் உட்கார வைத்து, 48 மணி நேரத்திற்குப் பிறகு நாற்காலியில் உட்கார வைத்து பிறகு நடக்க வைக்கிறோம்.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கூட, 24 மணி நேரத்திற்குப் பிறகு, வெளியே வந்த பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள். 72 மணி நேரத்தில் அவர்களை நடக்க வைக்கிறோம்.
எனவே, நடப்பது மிக மிக முக்கியம். இது “கார்டியாக் ரீஹேபிலிடேஷன்’ (Cardiac Rehabilitation) என்ற முறையின் கீழ், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Personalized) சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.
ஏனெனில், ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு விதமானவர்கள். சிலருக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு தசைகள் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு கால் வலி காரணமாக நடக்க முடியாமல் இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக, அவர்களுக்கேற்றபடி நாங்கள் நடைப்பயிற்சியைப் பரிந்துரைக்கிறோம்.

நடைப்பயிற்சி இதயத்தின் திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத் திறனை உயர்த்துகிறது. நோயாளியின் இதய நிலை, ஸ்டென்ட் வைத்த பிறகோ அல்லது பைபாஸ் செய்த பிறகோ, அல்லது நாள்பட்ட நிலையான இதய நோயில் (Stable Angina) இருந்தால், மருத்துவர் அறிவுறுத்தியபடி நடக்கலாம்.
பொதுவாக, காலை மற்றும் மாலை என இரு வேளையும் நடக்கச் சொல்வோம். ஒரு வேளை மட்டுமே நடக்க முடியுமானால், காலையில் நடப்பது நல்லது.
ஆரம்பத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 நாள்கள் நடக்க வேண்டும். இதனை படிப்படியாக 15, 20, 25, 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். தொடர்ந்து 30 நிமிடங்கள் நடந்த பிறகு, 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் 30 நிமிடங்கள் நடக்கலாம்.