அந்த வகையில், இதயநலனுக்குப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் சப்ளிமென்ட்டுகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
இவற்றில் முதன்மையானது ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் (Omega-3 Fatty Acids). இது மீன் எண்ணெயில் (Fish Oil) அதிகம் உள்ளது. குறிப்பாக, சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் டூனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மீன் சாப்பிட முடியாத சைவ உணவுக்காரர்கள், அதற்கு பதிலாக வால்நட்ஸ், சோயா பீன்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் (Flax seeds) ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு (Triglyceride) அளவைக் குறைத்து இதயத்திற்கு நன்மை செய்கிறது.

ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் மருந்துகள் எடுப்பவர்களுக்கு உடலில் கோஎன்சைம் Q10 (CoQ10) அளவு குறையலாம். இதனால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஈடுகட்ட, பசலைக்கீரை, புரொக்கோலி, காலிஃபிளவர், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, நிலக்கடலை, எள், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதயத்துடிப்பு சீராக இருக்கவும், தசைவலியைத் தவிர்க்கவும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அவசியம். இந்தச் சத்துகள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், அவகாடோ, மாதுளை, சப்போட்டா, கொய்யா மற்றும்பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றில் மிக அதிகம்.