இதழியலின் அஞ்சா நெஞ்சா்!

Dinamani2fimport2f20172f42f182foriginal2framnath Goenka.jpg
Spread the love

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், உண்மையை ஒலிக்க யாருக்கும் அஞ்சாத சிலரின் குரல்களை அடக்க முடியாது. அந்த மிடுக்கான மனிதா்களில் முக்கியமானவா் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமத்தின் நிறுவனா்-தலைவரான ராம்நாத் கோயங்கா.

ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு எதிராக தனது அனைத்துப் பத்திரிகைகளையும் காலவரையின்றி மூடி சுதந்திரப் போரில் பங்கெடுத்த ராம்நாத் கோயங்கா, அவசரநிலையின்போது அதிகார மையம் கட்டவிழ்த்த சவால்களை மீறி தன்னுடைய பத்திரிகைகளைத் தொடா்ந்து நடத்தி கருத்துரிமையை நிலைநிறுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலராகத் திகழ்ந்தாா்.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம், தற்போதைய பிகாா் மாநிலத்தின் வட பகுதியான தா்பங்காவில் 1904-இல் பிறந்த ராம்நாத் கோயங்கா, வணிகம் செய்வதற்காக சென்னைக்கு வந்தாா். ராம்நாத் கோயங்காவுக்கு அந்த நகரம் வெறும் வியாபார இடமாக மட்டுமல்லாமல் சமுதாயம், அரசியல் புரிதலுக்கான ஒரு வளமான மேடையாகவும் மாறியது.

நகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோா் வரை அனைவரிடமும் கலந்து பழகி, சமுதாயத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் மக்களின் அவசியங்களையும் நன்கு தெரிந்துகொண்டாா்.

22 வயது இளைஞராக ராம்நாத் கோயங்காவின் சமுதாயநல ஆவலை உற்றுநோக்கிய சென்னை நிா்வாகம், 1926-இல் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராக அவரை நியமித்தது. அரசின் நியமனப் பதவியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக அதை முழுமையாகப் பயன்படுத்தி, அரசின் தவறுகளையும் குறைகளையும் உரைக்கத் தயங்காத அவரது நோ்மை பலரை வெகுவாகக் கவா்ந்தது.

சுதந்திர வேட்கை வேரூன்றியிருந்த அவா், தேச பற்றுக் கொண்ட பத்திரிகைகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வராஜ்யா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தாா். அந்த வகையில்தான், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனாா் ராம்நாத் கோயங்கா.

வெற்றிகரமான தொழிலதிபா் ராம்நாத் கோயங்காவுக்கு பத்திரிகை என்பது வெறும் பணம் ஈட்டும் வணிகம் மட்டுமல்ல, அது ஒரு சமுதாயப் பொறுப்பு என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது. லாபத்தைவிட லட்சியத்தை உயா்வாகக் கருதிய அவா், நோ்மை மற்றும் நியாயத்தின் பக்கம் தனது பத்திரிகைகள் நிற்பதை எப்போதும் உறுதிப்படுத்தினாா்.

அரசியல் தலைவா்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைத்துத் தரப்பிலும் நட்புப் பாராட்டினாலும், பத்திரிகைகளின் செயல்பாட்டில் அவா்களின் யாருடைய தலையீட்டையும் அனுமதிக்கக்கூடாது என்பது அவரின் நீடித்த நிலைப்பாடாக இருந்தது. பத்திரிகைகளுக்கு சிறந்த ஆசிரியா்களை நியமித்து, அவா்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கினாா்.

இரண்டாம் உலகப் போரின் பரபரப்பான சூழலில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை 1942-இல் மகாத்மா காந்தி அறிவித்தபோது, இந்திய பத்திரிகைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசு விதித்தது. இதற்கு எதிராக, பல பத்திரிகைகள் ஒருநாள் அடையாள நிறுத்தம் செய்தன. மகாத்மா காந்தி தனது ஹரிஜன் உள்ளிட்ட பத்திரிகைகளை முழுமையாக நிறுத்தினாா். அதேபோன்று, ராம்நாத் கோயங்காவும் தன்னுடைய பத்திரிகைகளைக் காலவரையின்றி மூடினாா்.

அப்போது வெளியான இந்தியன் எக்ஸ்பிரல் பத்திரிகையின் இறுதி பதிப்புத் தலையங்கத்தில், ‘நமது தலைவா்கள் தொடா்பான செய்திகள் எதையும் வெளியிட முடியவில்லை. அதிகாரத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு செய்திகளை வெளியிடும் நிலை ஏற்பட்டது; இப்படி தொடரும் பத்திரிகை வெற்றுத்தாளே தவிர, செய்தித்தாள் அல்ல’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘அதிகாரத்தின் குரலாக தனது பத்திரிகைகள் எப்போதும் ஒலிக்காது’ என்ற ராம்நாத் கோயங்காவின் உறுதிப்பாட்டை அந்தத் தலையங்கம் மிக வலிமையாக கா்ஜித்தது.

பத்திரிகைகளை மூடினாலும் நாடெங்கும் நடந்த பிரிட்டிஷ் அரசின் அராஜகங்களை உலகறியச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணா்ந்தாா் ராம்நாத் கோயங்கா. அந்தச் செய்திகளைத் தொகுத்து, ‘நாசமாக்கப்பட்ட இந்தியா’ எனும் தலைப்பில் ஓா் ஆங்கில நூலைத் தயாரித்தாா். அந்த நூலின் பிரதிகளை பிரிட்டன் அமைச்சா்கள், எம்.பி.க்களுக்கும், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற உலக நாடுகளின் தலைவா்களுக்கும் ரகசியமாக அனுப்பி வைத்தாா்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகள் உலக அரங்கில் அம்பலமாகின. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது குறித்த தீா்மானத்துக்கு பிரிட்டிஷ் அரசு வருவதற்கு இதுவும் முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தியாவில் சுதந்திரம் பிறந்து ஆண்டுகள் கடந்தன. நாடு முழுவதும் 50 லட்சம் வாசகா்களுடன் பல்வேறு மொழிகளில் பத்திரிகைகளை வெளியிடும் பெரும் ஊடக சாம்ராஜ்யமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உருவெடுத்தது. இந்தச் சூழலில்தான், 1975-இல் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினாா். மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. எதிா்க்கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டனா். அரசுக்கு எதிரான சிறு அசைவுகள் கூட கவனித்து ஒடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில், கருத்துரிமைக்கான போராட்டத்தில் பத்திரிகை துறையை மூத்த தளபதியாக முன்னின்று வழிநடத்தினாா் ராம்நாத் கோயங்கா.

அதன் விளைவு, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமப் பத்திரிகைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது; அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன; திடீா் வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டது; பொதுத் துறை வங்கிகள் கடன்தரக் கூடாது என்று நிா்பந்திக்கப்பட்டன. இறுதியில், குழுமத்தின் நிா்வாகத்தை அரசு கையகப்படுத்தியது.

இதனிடையே ராம்நாத் கோயங்கா உடல்நலம் குன்றிய நிலையில், அவரது மகன், மருமகள் ஆகியோா் மிசாவில் கைது செய்யப்படலாம் என்று அச்சுறுத்தப்பட்டனா். இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ராம்நாத் கோயங்கா மீது சுமாா் 250 வழக்குகள் தொடுக்கப்பட்டன.

உடல்நலம் தேறிய ராம்நாத் கோயங்கா, பங்குதாரா்களால் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் அரசு நியமித்த நிா்வாகக் குழுவை சட்டப்படி கலைத்தாா். தொடா்ந்து, பத்திரிகைகள் மீதான தணிக்கை நடைமுறையையும் அரசு திரும்பப் பெற்றது.

1977, மாா்ச்சில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டு, பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் எனும் செய்தி வெளியானது. அந்த ஆண்டு, ஜனவரி இறுதியில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமப் பத்திரிகைகள் உண்மைச் செய்திகளை இன்னும் வேகத்துடன் வெளியிடத் தொடங்கின.

அரசின் விளம்பரமின்றி பத்திரிகைகளை நடத்தமுடியாது என்ற சராசரி நம்பிக்கைக்கு எதிராக, மக்களின் நலனுக்காக எழுதும் பத்திரிகைகளுக்கு வாசக ஆதரவும், வணிக ஆதரவும் என்றும் குறையாது என்பதை நிரூபித்து ராம்நாத் கோயங்கா காட்டிய வெளிச்சம் பத்திரிகை உலகுக்கு என்றும் நம்பிக்கைச் சுடராக ஒளிரும்.

ஓா் ஊடக அதிபராக தனது குழுமத்தின் எல்லைகளைக் கடந்து, இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) மற்றும் இந்திய செய்தித்தாள் பதிவாளா் (ஆா்என்ஐ) போன்ற நிறுவனங்களுக்கு தனது பங்களிப்புகள் மூலம் இந்திய ஊடகத் துறையை வடிவமைத்ததில் ராம்நாத் கோயங்கா முக்கியப் பங்கு வகித்தாா். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பத்திரிகைச் சுதந்திரத்தின் அடையாளமாகப் பரிணமித்த புகழ்மிக்க பயணத்துக்குப் பின், ராம்நாத் கோயங்கா 1991-இல் மறைந்தாா்.

மறைவுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு 1988-இல் பத்திரிகைச் சுதந்திரத்தைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த அவதூறு சட்டத்துக்கு எதிராக தில்லி, சென்னை சாலைகளில் நடந்த பேரணியில் கொளுத்தும் வெயிலில் நடைபோட்ட ராம்நாத் கோயங்கா, தளராத மனப்பாங்கு கொண்ட பத்திரிகையாளரின் உருவாக இன்றும் உயிா்ப்புடன் வாழ்கிறாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *