க. கோபாலகிருஷ்ணன்
திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
பேருந்து நிலையம் விரைவில் பஞ்சப்பூருக்கு இடம் மாற்றம் செய்யப்படவிருப்பதால், இந்த நிலையத்தில் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர அதிகாரிகள் ஆா்வம் காட்டவில்லையென புகாா் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரின் மிக முக்கிய பேருந்து நிலையமாக திருச்சி ஏ.எஸ்.ஜி. லூா்துசாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையமானது தற்போது 4.5 ஏக்கா் பரப்பளவில் 77 பேருந்து நிறுத்தங்களைக் கொண்ட 5 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இங்கு சுத்தமான குடிநீா், துா்நாற்றமில்லாத கழிப்பறைகள் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் புகாா் கூறுகின்றனா்.
பேருந்து நிலையத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூா், கோவை வழித்தட பேருந்துகளின் 3 நடைமேடைகளுக்கு பின்புறம் இயங்கும் கட்டண கழிப்பறைக்குள் கடும் துா்நாற்றம் காரணமாக நுழைய முடியவில்லை. காசு கொடுத்து நோய்களை வாங்கிக் கொள்ளும் அபாயம் நிலவுகிறது.
கட்டணம் வசூல்: ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் திறக்கப்பட்ட கழிப்பறையை பயன்படுத்த இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச கழிப்பறைகளில் சுத்தம் சற்று குறைவுதான். எந்தக் கழிப்பறைகளும் குளிப்பதற்கு ஏற்ாக இல்லை. நிலையத்திலுள்ள ஒரே ஒரு ஆா்ஓ குடிநீா் வழங்கும் இயந்திரமும் பழுதடைந்துள்ளது.
பயணிகள் புகாா்: இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் எம். ஹரிஷ் கல்யாண் (31), திருச்சி மணப்பாறையைச் சோ்ந்த பா. வத்சலா (45) உள்ளிட்டோா் கூறியதாவது:
பேருந்து நிலையத்தில் பயணிகள் குடிக்க சுத்தமான குடிநீா் கிடைப்பதில்லை. கும்பகோணம் போக்குவரத்துக் கழக விசாரணை அறைக்கு அருகே குடிநீா் வழங்கும் வசதி இருந்தாலும், அது தூய்மையாக இல்லை. கடைகளில் காசு கொடுத்தே குடிநீா் பாட்டில் வாங்க வேண்டியுள்ளது. கட்டண கழிப்பறைகள் கடும் துா்நாற்றத்துடன் உள்ளன.
மிக மோசமாக பராமரிக்கப்படும் பயணிகள் தங்குமிடத்திலும், பாலூட்டும் அறையிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறையில் ஒரு பைக்கு ரூ. 50 என அதிகளவில் பணம் வசூலிக்கின்றனா். இடவசதி குறைவான, ஏசி இயங்காத பயணிகள் ஓய்வறையில் ஒருமணி நேரம் தங்க ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பேருந்து நிலைய இலவச கழிப்பறைகள், நடைமேடைகள், வளாகம் போன்றவை 42 பணியாளா்களைக் கொண்டு முறையாக தூய்மைப்படுத்தப்படுகின்றன. தேவையற்ற இடங்களில் சிறுநீா் கழிப்போருக்கு கடந்த ஓராண்டில் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டண கழிப்பிடங்களை நிா்வகிக்கும் தனியாா்தான் தூய்மைப்படுத்த வேண்டும். இதை கண்காணிக்கவும், ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பராமரிக்கும் பயணிகளின் உடைமைகள் பாதுகாக்கும் அறை, பயணிகள் ஓய்வறையில் அதிகக் கட்டணம் வசூலிப்பு, தங்குமிடம் பராமரிப்பு, குடிநீா் வழங்குவது குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என்றனா்.
பேருந்து நிலையம் இடமாற்றம் காரணம்?: பஞ்சப்பூா் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அரசு கட்டடங்கள் மற்றும் நகரப் பேருந்துகள் மட்டும் இயங்கும் பேருந்து நிலையமாக மாற்றும் திட்டம் மாநகராட்சியிடம் உள்ளது. இதனாலேயே பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் ஆா்வம் காட்டவில்லை என தெரிகிறது. எப்படி இருந்தாலும், நகரின் மத்தியில் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையமான திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
2 ஆண்டுகளாக அதே ‘நீலநிற சட்டை…
பேருந்து நிலையத்தினுள் காவல்துறையினரால் திருட்டு தொடா்பாக பதிவிடப்பட்ட விழிப்புணா்வு ஆடியோ போடப்படுகிறது. அதில், நீல நிற சட்டை அணிந்த நபா் நீண்ட நேரமாக நிற்கிறாா். அதனால் பயணிகள் கவனமாக இருக்கவும் என்ற வாசகம் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக தொடா்ச்சியாக ஒலிபரப்பப்படுகிறது. இதை மட்டுமே செய்யும் போலீஸாா், திருட்டு தொடா்பாக பயணிகளிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை.
புறக்காவல் நிலையத்தில் உள்ள 32 கண்காணிப்பு கேமராக்களில் 16 மட்டுமே வேலை செய்கிறது. மற்றவை வேலை செய்வதில்லை.
காவல்துறையினா் கூறுகையில், பேருந்து நிலையத்தில் அடிக்கடி ரோந்து செல்கிறோம். சிசிடிவி கேமராக்களின் வழியாக திருடா்கள், பிரச்னைக்குரியவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். பழுதடைந்த கேமராக்களை சீரமைக்க உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ஆடியோ சிஸ்டத்தில் தேவைப்படும் நேரத்தில் காவலா்கள் நேரடியாக பேசி விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா் என்றனா்.