கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
போரின் முதல் நாளில் மட்டும் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,900 கோடி) செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு ஒட்டுமொத்தமாக 210 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 18.87 லட்சம் கோடி) வரை செலவாகக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நேரடி நிதி உதவியையும் சேர்த்தால், இந்தத் தொகை இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தனது மிகவும் விலையுயர்ந்த மற்றும் நவீன ஆயுதங்களை இந்தப் போரில் இறக்கியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ (USS Gerald R. Ford) உட்பட இரண்டு பிரம்மாண்ட கப்பல்கள் போர்க்களத்தில் உள்ளன. இந்தக் கப்பல்களை இயக்குவதற்கு மட்டும் ஒரு நாளைக்குச் சுமார் ரூ. 58 கோடி செலவாகிறது. இது தவிர, வீரர்களைக் குவிப்பதற்கும் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் இதுவரை ரூ. 5,500 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் போரில் பின்வாங்கும் எண்ணம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. அவர்கள் இப்போது பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறார்கள், ஆனால் அதற்குரிய காலம் கடந்துவிட்டது. போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போர் இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
