இப்போது இருப்பது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அல்ல… இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சோளிங்கரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் அந்தக் கட்சிக்காக வகுத்த விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். விதிகளை திருத்தி தன்னை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். ஆனால், எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகள் என்னுடன் தான் இருக்கிறார்கள். கட்சியிலிருந்து களைகளை நீக்கிவிட்டதாக பழனிசாமி சொல்கிறார். உண்மையில் அவர் துரோகத்தின் நச்சுச் செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது இருப்பது உண்மையான அதிமுக அல்ல. இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக. வரும் தேர்தலில் அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாது வெற்றிக் கூட்டணியாகவும் அமையும்.
முந்தைய அரசு வாங்கிவைத்த கடன்களை இப்போதுள்ள அரசு அடைப்பது போல், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வாங்கி வைக்கும் கடன்களை அடுத்து வருபவர்கள் அடைப்பார்கள். இந்தியா வளர்ந்து வரும் நாடு. அதில், தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. ஆனாலும் இன்னமும் இங்கு பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் முன்னேறாமலேயே இருக்கிறது. அவர்களுக்கான திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தலாம். ஆனால், இலவச திட்டங்கள்தான் அதிகமாக உள்ளது. இதுபற்றி அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். மக்களும் தேவையற்ற இலவச திட்டங்களை அரசு அறிவித்தால் புறந்தள்ள வேண்டும். திமுக அரசு, அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் முதல்வர் கனவு பலிக்காது.
கரூரில் நடந்த துயரச் சம்பவம் ஒரு விபத்து; அதில் சதிவேலை எதுவும் இல்லை. அந்தச் சம்பவத்துக்காக விஜய், காவல்துறையினர் உள்ளிட்ட யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது. சில கட்சிகள் இதை அரசியல் ஆக்குகின்றன. அதேசமயம், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் தான் விசாரித்து உண்மையைச் சொல்ல வெண்டும்.