இது தியேட்டர் இல்ல மானமே போகுது, கடுப்பாகி ரசிகர்களை கடித்து கொண்ட நடிகர் அஜித்குமார் – Kumudam

Spread the love

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பையும் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற சொந்த அணியை உருவாக்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இவரது இந்த ஆர்வம், தமிழக இளைஞர்கள் மத்தியிலும் கார் பந்தயம் குறித்த ஒரு பெரிய விழிப்புணர்வையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது துபாயில் நடைபெறவுள்ள மிக முக்கியமான கார் பந்தயத்திற்காக, அஜித் குமார் தனது குழுவினருடன் அங்கேயே தங்கி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தினமும் பல மணிநேரம் பந்தயக் களத்தில் அவர் செலவிடுவதால், அவரைக் காண்பதற்காகத் தமிழகத்திலிருந்தும், துபாயிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிகின்றனர். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தன்னைத் தேடி வரும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை அஜித் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி நடந்த பயிற்சித் தளத்திற்குச் சென்ற சில ரசிகர்கள், அஜித்தின் அன்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கிருந்த விலையுயர்ந்த பந்தய கார்களின் மீது அநாகரிகமாக ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, குடிபோதையில் வந்த சில ரசிகர்கள் மற்ற நாட்டு வீரர்களின் கார்களைச் சூழ்ந்துகொண்டு, கத்தியும் கூச்சல் போட்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது சர்வதேச வீரர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்களின் இந்த பொறுப்பற்ற செயலைக் கண்டு மிகுந்த வேதனையடைந்த அஜித் குமார், நேரடியாக அவர்களிடம் சென்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். “தயவு செய்து கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். இது ஒன்றும் திரையரங்கம் கிடையாது. இப்படிச் செய்வதால் மானமே போகிறது” என்று ஆவேசமாகக் கடிந்துகொண்டார். தற்போது அஜித்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடிக்கடி ரசிகர்களுக்குப் பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும், ஒரு சிலரது இத்தகைய செயல்கள் அஜித்தைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *