“இது நாடகத்துக்கான இடமல்ல… பேசுவதற்கான இடம்" – எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

Spread the love

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “சில எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியின் கசப்பால் அவையைச் செயல்பட விடாமல் தடுப்பது இளம் எம்.பி.க்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழலை உருவாக்கும். தோல்வியின் கசப்பும் வெற்றியின் ஆணவமும் அவையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியடைந்த யுக்திகளை மாற்ற வேண்டும். அதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்கவும் தயாராக இருக்கிறேன். பீகார் தோல்வி நடந்து பல நாள்கள் ஆகிறது. அவர்கள் இப்போது அதிலிருந்து மீண்டிருக்க வேண்டும்.

சமநிலையுடனும், பொறுப்புணர்வுடனும், மக்கள் பிரதிநிதிகளாக நமது பொறுப்பைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இளம் எம்.பி.க்களும், முதல் முறையாக எம்.பி.க்களாக இருப்பவர்களும் தங்கள் திறமையைக் காட்டவும், தங்கள் தொகுதியின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக மாற தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் முடியவில்லை.

இதைச் செய்வதிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். அனைத்துக் கட்சிகளிலிருந்தும் புதிய எம்.பி.க்களுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் அனுபவங்களிலிருந்து சபை பயனடைய வேண்டும். புதிய தலைமுறை தேசத்திற்குப் பயனளிக்க முடியும். எனவே, இந்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாடகத்திற்குப் பல இடங்கள் உள்ளன.

இங்கே, நாடகம் அல்ல பேச்சு அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். முழு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் உங்களின் கோஷத்தை எழுப்பலாம். நாடாளுமன்றம் நீதிக்கானது, உங்கள் கோஷங்களுக்கானதல்ல.

மோடி
மோடி

சில மாநிலங்களில், மக்களிடம் செல்ல முடியாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பு அவர்கள் மீது அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் அவையில் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தங்கள் மாநில அரசியலுக்குப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தும் ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாடு இந்த விளையாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் உத்தியை மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *