வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகளைச் சத்தமில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறதாம் மலர்க் கட்சி. தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதிக்கு `பாடி பில்டிங்’ நடிகர், சாத்தூரில் மாநிலத் தலைவர், செங்கல்பட்டில் `பாகவதர்’ என்று இப்போதே பட்டியல் தயாராகிவருகிறதாம். அந்த வரிசையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை `பூ’ நடிகைக்குக் கொடுத்துவிட கட்சிக்குள் சிலர் பேசியிருக்கிறார்கள்.
விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் டென்ஷனான `பூ’ நடிகை, ‘“சின்னவர்கூட மோதவிட்டு என்னைய காலி செய்யலாம்னு பிளான் பண்றாங்க. ஜெயிக்கிற தொகுதியா குடுத்தா போட்டியிடுறேன். இல்லைன்னா, எனக்கு சீட்டே வேண்டாம்…’’ என்று டெல்லியிலுள்ள சீனியர்கள் சிலரிடம் கொதித்துவிட்டாராம்.
`இன்னும் லிஸ்ட் முடிவாகவில்லை. அதற்குள்ளாக ஏன் அவசரப்படுகிறீர்கள்?’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள் அந்த சீனியர்கள். மலர்க் கட்சிக்குள் வந்ததிலிருந்து பெரிதாக அங்கீகாரம் ஏதுமில்லாத வருத்தத்தில் இருக்கும் `பூ’ நடிகைக்கு, இந்த சேப்பாக்கம் தொகுதி விவகாரம் மேலும் அதிருப்தியைக் கூட்டியிருக்கிறதாம்.