இந்த வட்டி விகிதம்தான் அடிப்படை வருமான விகிதம் ஆகும். இந்த அடிப்படை வருமான விகிதத்தில் இருந்து அதிக லாபம் கிடைக்க வேண்டும் எனில், அதற்கேற்ப ரிஸ்க் எடுக்க வேண்டும். தனியார் சிறுவங்கிகளில் 8% – 9% வரை வட்டி வருமானம் கிடைக்கிறது. கடன் பத்திரங்களில் 8% – 11% வரை வட்டி கிடைக்கும். ஆனால், இவற்றில் ரிஸ்க்கைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை, கடன் சந்தை, இந்த இரண்டிலும் முதலீடு செய்யும் ஹைபிரீட் திட்டங்கள் என மூன்று வகை உண்டு. கடன் சந்தையில் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வருமானம் 7% – 8% என்கிற அளவில்தான் இருக்கும். ஹைபிரீட் திட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதலீடு செய்தால், 10% லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
சந்தை சார்ந்த திட்டங்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்து வைத்திருந்தால், 12% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது முதல் இரண்டு ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை 10% – 20% வரை குறைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பைப் பார்த்து பயப்படக் கூடாது. 7 முதல் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வைத்திருக்கும்போது 12% லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தை நன்கு செயல்படும்பட்சத்தில் 12% மேல்கூட லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது கடந்த கால வரலாறு. ஒருவருக்கு ஆண்டுதோறும் 12% லாபம் கிடைத்தாலோ போதும், அவருடைய முதலீடு 7 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாகிவிடும்.
ஆக, 12% லாபம் கிடைத்தால் போதும். நீண்ட காலத்தில் கணிசமான அளவில் நாம் சொத்தினை சேர்க்க முடியும் என்கிறபோது அந்த அளவில் நம் எதிர்பார்ப்பை அமைத்துக்கொள்வதை விட்டுவிட்டு, 20%, 30% என்று ஆசைப்பட்டால், தவறான திட்டங்களில் பணத்தைப் போட்டு, முழுப் பணத்தையும் இழக்கும் அபாயத்தில்தான் நாம் மாட்டுவோம்!