Last Updated:
NIH வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 85 dB அல்லது அதற்கு மேற்பட்ட சத்தங்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளிப்படுத்துவது காதுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே சவுண்ட் லெவல்களை 70 dB ஆக வைத்திருப்பது சிறந்தது.
சமீபகாலமாக இயர்போன்கள் மற்றும் ஹெட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் ரயில் மற்றும் ஆட்டோவில் நீண்ட தூர பயணங்கள் செய்யும் போது, இரைச்சல் நிறைந்த சூழலுக்கு மத்தியில் ஹெட்ஃபோன்களை அணிந்துகொண்டு இனிமையான இசையைக் கேட்டுக் கொண்டே பயணம் செய்கிறோம். இருப்பினும், தொடர்ந்து ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. இதுகுறித்து ஒரு சமூகவலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி பெண் பயணி ஒருவர் தனது X தளப்பக்கத்தில், ‘நீண்ட நேரம் ஹெட்ஃபோன்களை அணிவதால் ஏற்படும் ஆபத்துகள்’ குறித்து அவர் ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டார். அதில், தொடர்ந்து ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதால் தனக்கு காது தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது; “2 முதல் 3 வருடங்கள் தொடர்ந்து இயர்போன் பயன்படுத்திய பிறகு இறுதியாக எனக்கு தற்போது காது தொற்று ஏற்பட்டுள்ளது. தூங்கும் போது கூட (பெரும்பாலும் என் வலது காதில்) ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் ஹெட்ஃபோன்களை அணிந்திருந்தேன். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, காதில் தொடர்ந்து ‘டின்’ என்ற சத்தம் கேட்டு வருகிறது. அந்தக் காதில் வேறு எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. மருத்துவர்கள் என் காதில் இப்போது தொற்று ஏற்பட்டு சீழ் நிரம்பியுள்ளது என கூறினர். தயவுசெய்து இயர்ஃபோன் பயன்படுத்துவோர் கவனமாக இருங்கள். தொற்று ஏற்படுவதற்கு முன் உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயணி, ‘நான் ஒரு நாளில் 4 முதல் 5 மணி நேரம் இயர்போன்களைப் பயன்படுத்துகிறேன். இப்போது பயமாக இருக்கிறது’ என்று வேதனையோடு தெரிவித்துள்ளார். மற்றொருவர், “10-12 மணி நேரம் ஏன் அணிகிறீர்கள்? ஒரு மணி நேரம் அணிந்திருந்தாலே எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது” என்றுள்ளார். இந்த நேரத்தில், ஹெட்ஃபோன் பயன்பாடு குறித்த சில அடிப்படை முன்னெச்சரிக்கைகளை இங்கே காணலாம்…
NIH வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 85 dB அல்லது அதற்கு மேற்பட்ட சத்தங்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளிப்படுத்துவது காதுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே சவுண்ட் லெவல்களை 70 dB ஆக வைத்திருப்பது சிறந்தது.
காது பிரச்னைகள் குறித்து நம்மிடையே பேசிய சென்னையை சேர்ந்த காது, மூக்கு, தொண்டைக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் மாதேஷ், “சமீபத்திய ஆய்வொன்றில், ஹெட்ஃபோன் பயன்படுத்தாதவர்களைவிடவும், பயன்படுத்துவோருக்கு 5 முதல் 6 மடங்கு வரை செவித்திறன் இழப்புக்கான வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை செவித்திறனை இழந்துவிட்டால், அவர்களுக்கு பழைய நிலை என்ன செய்தாலும் எட்டாது. முடிந்தவரை காது கருவிகள் மூலம் பிரச்னையை ஓரளவு சரிசெய்யலாம். இதற்கு முக்கிய காரணம், இப்போது வரும் ஹெட்ஃபோன்கள், நேரடியாக காதின் உட்பகுதி வரை செல்கின்றன. அந்த ரப்பர் படலம், காதின் உள்ளே இருக்கும் செவித்திறன் திசுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன. காற்று உள்செல்வதையும் தடுக்கின்றன. அதனால் முடிந்தவரை இயர்பட்ஸ் – ப்ளூடூத் ஹெட்செட்டுக்கு பதிலாக ஓவர்-தி-இயர் என சொல்லப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தி வரவும்.
ENT மருத்துவர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு
முக்கியமான விஷயம், பணி சார்ந்த சூழல் போன்ற தவிர்க்கமுடியாத நேரத்தில் மட்டும் இயர்ஃபோன் பயன்படுத்தவும். நீண்ட பயணங்களின் போது முடிந்தவரை தவிர்க்கவும். ஏனெனில் அச்சமயங்களில் வெளிப்புற சத்தம் அதிகம் இருக்கும். அந்த சத்தத்திலிருந்து தப்பிக்க இயர்ஃபோன் சத்தத்தை அதிகரித்து, அதுவும் காதுகளுக்குள் நேரடியாக வைப்பதென்பது கூடுதல் சேதாரத்தை ஏற்படுத்தும். எனவே அதுபோன்ற நேரத்தில் ஸ்பீக்கரில் வைத்து பாட்டு கேளுங்கள்.
இதையும் மீறி ஹெட்ஃபோன் பயன்படுத்த வேண்டும் என்றால், 60 – 60 விதி எனப்படும் ‘ஹெட்செட் பயன்படுத்தும்போது அதை 60 % சத்தம் மட்டுமே வைப்பேன்; 60 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து ஹெட்செட் அணிய மாட்டேன்’ என்ற உறுதிமொழியை எடுங்கள். வருமுன் காப்பதே சிறந்தது என்பதால், எச்சரிக்கையோடு இருங்கள்” என்றார்.
November 11, 2025 9:46 AM IST
