இந்திய அரசின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு எனவும் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்றும் அதனை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்றும் பாஜகவினரும் அவர்களின் கொள்கை வழி அமைப்பினரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் ஓம் பிர்லா சமஸ்கிருதம்தான் பாரதத்தின் மூலமொழி என்று அவையிலேயே குறிப்பிடுகிறார். இவை இரண்டுமே தவறான பரப்புரையாகும்.
இந்திய அரசின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது.
இந்திய அரசு என்பதே பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்டதாகும். இதனை இந்திய விடுதலைக்கு முன்பே காந்தியடிகள் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலத் தாய்மொழிகளின் பெயரில் அமைத்தார். இந்தியா விடுதலை அடைந்தபிறகு, பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு,மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிப்பதற்காக மாநில புனரமைப்புக் குழுவினை அமைத்தது. அந்தக் குழுவிடம் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக தனது கருத்துகளை அளித்தது.
அதில், “மொழிவழிப் பிரிவினையை திமுக பாராட்டுகிறது. மொழிவழி அமையும் ஒவ்வொரு மாநிலமும் அதன் முழு அதிகாரத்துடனும் செயல்பட வேண்டும். நாடு என்பது கூட்டரசாக செயல்பட வேண்டும். சென்னை ராஜ்ஜியம் ஏற்கனவே இருந்தபடி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி வழிப் பிரிவாக அமைப்பதுதான் உடனடித் தேவை. இதனைச் செய்யும்போது, எந்தவொரு மொழிப்பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். ராஜ்ஜியங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டியது நிலப்பரப்பைப் பொறுத்து மட்டுமல்ல, ராஜ்ஜியங்களுக்கு ஒதுக்கப்படும் அதிகாரங்களைப் பொறுத்தும் மாறுதல் வேண்டும் என்பதைத் திமுக வற்புறுத்துகிறது” என்று கழகம் அளித்த கருத்துருவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய ஆட்சியாளர்களில் சிலர் ‘தட்சிணப் பிரதேசம்’ என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களை ஒரே அமைப்பாக்கிட முயற்சி செய்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தது திமுக. தென்னிந்தியாவிற்குட்பட்ட நிலப்பரப்பை மொழிவழி மாநிலங்களாகத்தான் பிரிக்கவேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தது.
பண்டிதர் நேரு தலைமையிலான அரசு தென்னிந்தியாவை மட்டுமல்ல, வடஇந்தியப் பகுதிகளிலும் மொழிவழி மாநிலங்களை உருவாக்கியது. இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல. அது, பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா என்பதை நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர்களும், ஆட்சியிலிருந்த பண்டிதர் நேரு போன்றோர்களும் உணர்ந்து செயல்பட்டனர்.
மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி ஆட்சி மொழியாக உள்ளது. அவையும் இந்த தேசத்தின் மொழிகள்தான். அவற்றையும் தேசிய மொழிகள் என்ற அடிப்படையில் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளாக, அலுவல் மொழிகளாக ஆக்கிட வேண்டும் என்பதை திமுக நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறது.
1965 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, “இந்தியாவில் 100க்கு 40 பேர் இந்தி பேசுவதாகக்கூறி, அதனால் அதைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். 40 சதவிகிதம் பேர் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், இந்தி ஒரு பகுதியில் உள்ள மக்களால் பேசப்படுகிறதேயன்றி, இந்தியா முழுவதும் பரவாலகப் பேசப்படவில்லை. ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது, நாடு முழுவதும் ஆட்சி மொழியாவதற்கானத் தகுதியைப் பெற்றுவிடாது. மொழிப்பிரச்னையில் திமுக கொள்கை என்னவென்றால், இந்தியாவில் முக்கிய மொழிகளாக உள்ள 14 மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆட்சி மொழிகளாகும் தகுதி தரப்படவேண்டும்” என்று வாதாடினார்.
திமுகவின் நோக்கம் இந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும். இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக, அலுவல் மொழிகளாக அனைத்து மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
மாநிலங்களவை உறுப்பினராக அண்ணா இருந்த காலத்தில் 8 ஆவது அட்டவணையில் 14 மொழிகள் இருந்தன. தற்போது அது 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில மொழிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெறக் காத்திருக்கின்றன. இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியாவின் தேசிய மொழிகள்தான்.
இந்தி மட்டுமே தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி. மூலமொழி என்றால் அதிலிருந்துதான் மற்ற மொழிகள் தோன்ற முடியும். அதாவது, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது என நிறுவப்பார்க்கிறார்கள். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் தனித்தன்மை கொண்டவை என்பதை ஏறத்தாழ 175 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுப்பூர்வமாக உலகத்திற்கு அறியச் செய்தவர் கால்டுவெல். இதனை 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்றஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது வெளிட்ட அறிக்கையில் முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
“தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால், தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887 ஆம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856 ஆம் ஆண்டு கால்டுவெல் தாம் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், ‘திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு,அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.