இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | Tamil Nadu has the highest medical infrastructure in India

1349009.jpg
Spread the love

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இடஒதுக்கீட்டை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் இந்த தீர்ப்பை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அல்லது தமிழகத்தில் பிறந்த மாணவர்களுக்காக 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தில் உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக்கட்டமைப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 2,294 முதுநிலை மற்றும் டிப்ளமோ மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் மாணவர்களுக்கென்று இதுவரை 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் 1,087 பேர் ஆண்டுதோறும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த தீர்ப்புக்குப் பிறகு எதிர்வரும் ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் 1,200-க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாய நிலை உருவாகியிருக்கிறது. இந்த இடங்கள் சொந்த மாநிலத்துக்கு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதால் அந்தந்த மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.

இந்த ஆண்டு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 3-ம் சுற்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ஏராளமான பேர் பயிலவும் தொடங்கி விட்டனர். எனவே இந்த தீர்ப்பினால் இந்த ஆண்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றாலும் முதல்வரின் அறிவுறுத்தலோடு, இந்த தீர்ப்பு சம்பந்தமாக மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *