சென்னை: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 2021-இல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல புதிய திட்டங்களை நிறைவேற்றி, அதில் தொடா்ந்து வெற்றிக் கண்டு வருகிறாா்.மகளிா், மாணவா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், மீனவா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் அவா் நிறைவேற்றி வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும் அயல்நாடுகளையும் ஈா்த்து வருகின்றன.
மகளிா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டத்தில் இதுவரையில் ரூ.6,661.47 கோடி செலவில் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயணம் மேற்கொண்டு, அவா்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
2023 செப்டம்பா் 15-இல் தொடங்கப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 1.15 கோடி மகளிா் மாதந்தோறும் ரூ1,000 பெற்று வருகின்றனா். மகளிா் உரிமைத் தொகைக் கிடைக்காதவா்களுக்கும் வழங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.