இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்துள்ளது.
இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் பங்கெடுத்த 3 கூட்டிணைவுகளை தீவிரமாக ஆராய்ந்தபிறகு, பெங்களூரை சேர்ந்த பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் ஆக. 12-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது.
இந்த கூட்டிணைவு பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா, பியர்சைட் ஸ்பேஸ், ஸôட்ஷூர் அனாலிட்டிக்ஸ் இந்தியா, துருவா ஸ்பேஸ் நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.
அரசு, தனியார் கூட்டுமுயற்சியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள், 12 செயற்கைக் கோள்களை கொண்டதாகும். இதனை வடிவமைத்து, கட்டமைத்து, செயல்படுத்தும் முழுபொறுப்பும் பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரளில் பாராக்ரோமாட்டிக், மல்ட்டிஸ்பெக்ட்ரல், ஹைபர் ஸ்பெக்ட்ரல், மேக்ரோவேவ் சிந்தடிக் அபர்ச்சர் ரேடார் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது, வானிலை மாற்றக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, உள்கட்டமைப்பு, கடல் கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு, நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய திறனாய்வுக்கு உகந்த தரவுகள், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை அளிக்கும். இதுதவிர, உலக அளவில் தேவைக்கேற்ற புவியியல் நுண்ணறிவு தரவுகளையும் வழங்கும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் உயர் தெளிவுத்திறன் மற்றும் உள்நாட்டு தரவுகளை உறுதி செய்ய முடியும். மேலும், இதுபோன்ற தரவுகளுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதில்லை. இதுதவிர, தரவு இறையாண்மையை உறுதி செய்வதோடு, விண்வெளிசார் தரவுகள் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெறும் என இன்ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.